சந்நிதி ஆலயத்தின் உற்சவத்தினை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தனது ஆட்சிப் பிரதேசத்தினூடாக கோயிலை அடையும் பக்கதர்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

சந்நிதி தேவஸ்தானத்தின் திருவிழா நடைபெற்று வருகின்றது. இதன் இறுதித் திருவிழாக்களான தேர், தீர்த்தம், சப்பரம் போன்ற திருவிழாக்களுக்கு பெருந்தொகை பக்தர்கள் வரவுள்ள நிலையில் தேவையான அடிப்படைக் கட்டுமானங்களைப் பூர்த்தி செய்யுமுகமாகவே வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையின் எல்லையில் இவ்வருடம் அமைக்கப்பட்ட நீர்ப்பாசனத் திணைகளத்தின் நீர்த்தடுப்புக் கதவுகளின் மேலாகவுள்ள பாலத்தின் வழியாக இறுதி மூன்று தினங்களும் பத்தர்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் இப்பகுதியில் மின் ஒளியூட்டும் பங்களிப்பினை வலி கிழக்கு பிரதேச சபை மேற்கொள்ளவுள்ளது.

இப் பகுதியில் நிறுத்தப்படும் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமுகமாக பக்தர்களின் வாகனப் பாதுகாப்பு நிலையம் ஒன்றையும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை குத்தகைக்கு வழங்கியுள்ளது. 

மேலும் வலி கிழக்கின் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி, அச்சுவேலி அக்கரை  வழியாக ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் நலன் கருதி அப் பகுதிகளில் மின் விளக்குகள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளதுடன் பழுதடைந்திருந்த மின்குழிழ்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளதும் சிரமதான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.