"படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவனேஸ்வரன் றெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தவரின் மகளான சிறுமி ஒருவர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

 அதனால் இந்த கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே அதுதொடர்பில் அந்தச் சிறுமியை நீதிமன்றில் முற்படுத்தி அவரிடம் சாட்சியம் பெறப்படவேண்டும். அதன்மூலமே இந்த வழக்கின் சரியான போக்கை உறுதிப்படுத்த முடியும். அத்துடன், குற்றவாளி எவராவது வெளியில் இருந்தால் அவரைக் கைது செய்ய முடியும்"

இவ்வாறு பாதிக்கப்பட்டோர் நலன்சார்பில் முன்னிலையாக சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் மன்றுரைத்தார். 

அத்துடன், இரண்டாவது சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுதாகரனும் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டி மன்றுரைத்தார். பாதிக்கப்பட்டோர் சார்பான விண்ணப்பதை ஏற்ற மல்லாகம் நீதிவான் நீதிமன்று,  சம்பந்தப்பட்ட சிறுமியையும் வழக்கின் மற்றொரு சாட்சியான சிறுவனையும் எதிர்வரும் 4 ஆம் திகதி மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டார்.

அன்றைய தினம்வரை சந்தேகநபர்கள் 3 பேரினதும் விளக்கமறியல் நீதிமன்றால் நீடிக்கப்பட்டது.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது - 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து கடந்த ஜூன் 25ஆம் திகதி  திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர், கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை  விசாரணைக்கு வந்தது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் சந்தேநபர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர். 

வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணை அறிக்கையை மன்றில் முன்வைத்தனர். இதனை அடுத்தே நீதிமன்று மேற்படி உத்தரவுகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.