பிரிவினைகளினால் சிதறிப்போயிருக்கும் மானிட சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே இருக்க வேண்டிய பரஸ்பர புரிந்துணர்விற்கு சிறந்ததோர் முன்னுதாரணமாகவே ஹஜ்ஜுப் பெருநாள் அமைகின்றதென ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்செய்தி வருமாறு,

உலகெங்கும் வாழும் பல இலட்சக்கணக்கான இஸ்லாமிய பக்தர்கள் ஒரே குறிக்கோளுடன் ஒன்றிணைந்து, ஒரே புண்ணிய தலத்தில் ஒன்றுகூடி மானிட சமுதாயத்தின் ஏகோபித்த எதிர்பார்ப்பான ஒற்றுமையின் பெருமையை உலகறியச் செய்யும் ஹஜ்ஜுப் பெருநாள் சமூக சகவாழ்வின் மகிமையை உலக மக்களுக்கு எடுத்தியம்பும் ஒரு முதன்மையான சமய நிகழ்வாகும்.

பண்டைய காலந்தொட்டே சமய அனுஷ்டானங்களில் ஈடுபடும்போது மானிடர்கள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்துள்ளனர் என்பதை மனித வரலாற்றை நோக்கும்போது எம்மால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

சமயங்களுடன் பிணைந்து காணப்படும் வழிபாட்டு முறைகளை பாதுகாக்கும் அதேவேளை, மக்களுக்கிடையிலான நல்லுறவை விருத்தி செய்யவும் இந்த சமய நிகழ்வுகள் உதவுகின்றன.

ஹஜ் யாத்திரை என்பது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பினை எடுத்துக்காட்டும் ஒரு புனித நிகழ்வாகும். நாடுகளினதும் தனிநபர்களினதும் தராதரங்களை பாராது உலகின் நாலா திசைகளிலிருந்தும் வருகைதரும் சகல பக்தர்களும் ஒன்றாக இணைந்து இறைவனை ஆராதிக்கும் ஒரு புண்ணிய நிகழ்வாக இதனை குறிப்பிடலாம்.

பிரிவினைகளினால் சிதறிப்போயிருக்கும் மானிட சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே இருக்க வேண்டிய பரஸ்பர புரிந்துணர்விற்கு சிறந்ததோர் முன்னுதாரணமாகவே ஹஜ்ஜுப் பெருநாள் அமைகின்றது.

புனித மக்கா நகரத்தை மையப்படுத்திய சமத்துவத்தின் செய்தியை மனிதர்களிடையே கொண்டு சேர்க்கும் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் நம் நாட்டின் சகல இஸ்லாமிய பக்தர்களுக்கும் உலகவாழ் முஸ்லிம்களுக்கும் எனது இதயபூர்வமான தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.