யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் அமைந்துள்ள வைத்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.  

சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் தொடர்பில் விசனமடைந்த நீதிமன்று அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.

கொக்குவில் சம்பியன் லேனில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்றுமுந்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்தது.

தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஞாயிறுக்கிழமை இரவு முறைப்பாடு செய்திருந்தார்.

அத்துடன், வைத்தியருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் முற்படுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.  

வைத்தியரின் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறியிருந்தனர். 

தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்  என்றும் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் அரசடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்றிரவு கைது செய்தனர். 

சந்தேகநபரை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தினர். 

சந்தேகநபர் சார்பில் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் தொடர்பில் மன்று திருப்தியடையாத நிலையில் , சந்தேகநபர் சார் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை கோரிய போது மன்று பிணை வழங்கியது.