யாழ். மாநகரசபையின் கீழ் சிறு வண்டில்களில் குப்பை சேகரிப்போர் ஓர் ஆலயத்தை அண்டிய பகுதியில் அக் குப்பைகளைக் கொட்டி அங்கிருந்து பின்பு வாகனத்திற்கு மாற்றும் செயலை நிறுத்துமாறு கூறிய மதகுருவுடன் தகாத முறையில் உரையாடிய யாழ் மாநகர சபை ஊழியரை உடனடியாக தற்காலிக பணி இடைநிறுத்தம் செய்யுமாறு சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை வேறு வாகனத்திற்கு மாற்றும் நடவடிக்கைகளை ஆலயத்திற்கு முன்னால் வைத்துச் செய்யாது பிற இடத்திற்கு மாற்றுமாறு மதகுரு ஒருவர் தெரிவித்திருந்தார். அதன்போது ஊழியர் மறுக்கவே அவ்வாறானால் மாநகர முதல்வரிடம்தான் கூறவேண்டிய நிலமை ஏற்படும் என மதகுரு சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்போது மேயரிடம் கூறினாலும் பயமில்லை அவர்கள் எம்மை ஒன்றும் செய்ய முடியாது என ஊழியர் ஏளனமாக பேசியுள்ளார். இதனால் குறித்த மதகுரு படம் எடுத்து ஒப்படைத்துள்ளார். இந்த செயலிற்கு சபை எடுக்கும் நடவடிக்கை என்ன எனக் கோரப்பட்டது.

இதன்போது குறித்த ஊழியர் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டும். என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.