(இரோஷா வேலு) 

சட்டவிரோதமான முறையில் புகையிலை (பீடி ) அடங்கிய கொள்கலன்கள் இரண்டை சுங்க பிரிவினர் கைப்பற்றி கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.  

சுங்க புலனாய்வு பிரிவினர் மற்றும் நடமாடும் பரிசோதனைக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலேயே குறித்த கொள்கலன்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட இரண்டு கொள்கலன்களிலும் 18 டொன் நிறையுடை 130 இலட்சம் பெறுமதியுடைய பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொள்கலன்கள் வெளியேறியிருந்தால் அரசுக்கு 1030 இலட்சம் நஷ்டமேற்பட்டிருக்கலாம் எனவும் சுங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு கடந்த ஆகஸ்ட் 7 ஆம் திகதி, 13 ஆம் திகதிகளில் வந்த கொள்கலன்கள் சுங்க பரிசோதனைகளுக்காக ஒருகொடவத்தையிலுள்ள சுங்க திணைக்கள கொள்கலன் தரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. 

இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட ஒரு கொள்கலன் வெங்காய இறக்குமதி என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்டு கொள்கலன் தரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படாமல் கொழும்பு மாவத்தை பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தில் அதனுள் காணப்பட்ட பீடி இலைகளை கீழிறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே கைப்பற்றப்பட்டன. 

இதில் இன்னுமொரு கொள்கலனானது மிகவும் சூட்சுமமான முறையில் கொண்டுவரப்பட்டு வெற்று கொள்கலன்கள் வெளியேறும் பாதையினால் வெளியேற முற்பட்ட வேளையில் சுங்க அதிகாரிகளினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டன.  

இந்த இரண்டு கொள்கலன்களானது இந்திய தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்டு உள்நாட்டு சந்தைக்கும் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இவற்றில் ஒன்றில் 450 இலட்சம் ரூபா வரி ஏய்ப்பு செய்யும் வகையில் 14 டொன் நிறையுடைய 100இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் மற்றையதில் 130 இலட்சம் ரூபா வரி ஏய்ப்பு செய்யும் வகையிலான 4 டொன் நிறையுடைய 30 இலட்சம் ரூபா பெறுமதியான  பொருட்களும் காணப்பட்டுள்ளது. 

சுங்க பரிசோதனை பிரிவின் பிரதான உதவி பரிசோதனை அதிகாரி அஜித் சிறிவர்தனவின்  நேரடி வழிக்காட்டலின் கீழ் பிரதான பரிசோதனை அதிகாரி குழுவினால் இந்த இரண்டு சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான சூழ்ச்சிகளினூடாக உள்நாட்டு சந்தைக்கு கொண்டுவரும் பல்வேறு விதமான சட்டவிரோத பொருட்கள் மற்றும் வரி ஏய்ப்பு செய்யும் பொருட்களையும் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக மேலும் சுங்க பிரிவு தெரிவிக்கின்றது.