(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிட முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்காது தற்போது தோல்விக் கண்டுள்ள நிலையில் அந்த இலக்கை அடைவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார் என தெரிவித்த மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி  இராஜாங்க அமைச்சர் அஜித் பீ பெரேரா , ஒரு வேட்பாளரை கூட தெரிவு செய்து கொள்ள முடியாத நிலையில் கூட்டு எதிர் கட்சி நெருக்கடிகளை சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் தினைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதே  அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரின் எண்ணமாகக் காணப்படுகின்றது. இதேவேளை பொது எதிரணியினர் தினேஷ் குணவர்தனவை எதிர்கட்சி தலைவராக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது  மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் களமிரங்கப் போவதாகக் புதிய கதையை கூறிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு வேட்பாளரொருவரைக் கூட தெரிவு செய்ய முடியாத நிலையிலேயே கூட்டு எதிர்கட்சி காணப்படுகின்றது.

கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முயற்சித்தார். எனினும் அம் முயற்சி பலனளிக்கவில்லை. பின்னர் சமல் ராஜபக்ஷவை களமிறக்குவதற்கு என்ன செய்யலாம் என யோசித்தார்கள். அவருக்கும் அதற்கான வாய்ப்புக்கள் அமையவில்லை. காரணம் அவருக்கு மக்கள் ஆதரவு சிறிதேனும் காணப்படவில்லை. 

சில வேலைத்திட்டங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ சமல் ராஜபக்ஷவை களமிறக்கி பார்த்தார். எனினும் அது சாத்தியப்படவில்லை. பின்னர் தினேஷ் குணவர்தன பற்றி பேசினார்கள். அவருக்கு விருப்பம் உள்ளது. எனினும் மக்கள் அதனை விரும்பவில்லை. 

பொது எதிரணியினருக்கு ஸ்தீரமான ஒரு வேட்பாளரைக் கூட பெயர் குறிப்பிட முடியாத நிலையே காணப்படுகின்றது. இவ் வேட்பாளர் இல்லாத பிரச்சினைக்கு தீர்வு காணும் வரையில் காலத்தை கடத்துவதற்காகவே நான் வேட்பாளர் என ஒவ்வொருவரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இது யதார்த்தமாகும். எவ்வாறிருப்பினும் அவரவர் விருப்பத்திற்கு எதுவும் நடக்காது. அனைத்திற்கும் சட்ட வரையறை ஒன்று உள்ளதென்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்." என தெரிவித்தார்.