மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வென்று மீண்டும் பா. ஜ .க .ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, 

‘ அ.தி.மு.க - பா.ஜனதா கட்சிகள் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. எனவே தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. சேரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

 கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். தமிழகத்தை பொறுத்த வரை ஏற்கெனவே முதலமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்தனர். 

மத்திய அரசு மக்களுக்கு தரும் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர். அதே போலதான் தமிழகத்தில் ஆளும் தற்போதைய அ.தி.மு.க. அரசும் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுடன் இணக்கமாக உள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைபெற்ற துணை குடியரசு தலைவர் தேர்தலிலும் நாடாளுமன்ற மேல்-சபை துணை தலைவர் தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது. அதேபோன்று நாங்களும் நாடாளுமன்ற துணை சபா நாயகர் தம்பிதுரைக்கு (அ.தி.மு.க.) தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம்.

ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. நாடு முழுவதும் எண்பது இடங்களை பிடிப்பது சிரமம். காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்க்கட்சியாக தான் அமரும். 

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரையும் மோடி அரவணைத்து செல்கிறார். எனவே மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் அமையும். 

நாடாளுமன்ற தேர்தல் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் மட்டுமே தேர்தல் களத்தில் இடம்பெற போகிறது.  

பிரதமர் மோடி சிறப்பான ஆட்சி நடத்துகிறார். ஏழை- எளிய மற்றும் நடுத்தர மக்களின் நல்வாழ்வுக்கு பல சிறப்பான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும்.’ என்றார்.