வவுனியாவில் வன்புணர்வின் பின் கொல்லப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் துஸ்பிரயோகத்தின் பின் படுகொலை செய்யப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில், அவ் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையில் ஹரிஸ்ணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமைக்கான தடயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்படி சந்தேகதின் பேரில் அப்பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைகள் வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. 

சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து இது தொடர்பான குற்றப்பத்திர அறிக்கை இன்றும் வராத காரணத்தினால் குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சிறுமி மரணமாகி இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அச் சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லையென பெண்கள் அமைப்புக்கள் பலவும் கவலை வெளியிட்டுள்ளன.