கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவரை புளுமெண்டால் வீதியருகில் வைத்து புறக்கோட்டை பொலிஸார்  கைதுசெய்துள்ளனர் என பொலிஸ் ஊடக பிரிவு  தெரிவித்துள்ளது.

 இச்சம்பவத்தின் போது 312/6/பி, புளுமெண்டால் வீதி, கொழும்பு–13 ஐச் சேர்ந்த கதுருவானே ஹேவாவசமகே அஞ்சன மிதுன் என்பவரே கைதுசெய்யப்பட்டவராவார் 

புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிவால் பகுதியிலுள்ள பழக்கடை ஒன்றில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி காலை 7.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. 

இச்சம்பவத்தில் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான 40 வயதுடைய கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் எனப்படும் கிருஷ்ணா என்பவர்  உயிரிழந்தார்.  

இச்சம்பவத்தையடுத்து மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்கவின் நேரடி கண்காணிப்பின் கீழ் புறக்கோட்டை குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருந்தன. 

இந்த விசாரணைகளின் அடிப்படையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இரகசிய தகவல்களை பெற்றுக்கொடுத்த மற்றும் சூழ்ச்சிக்கு துணை போன குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் புளுமெண்டால் வீதியில் காலை 10 மணியளவில் புறக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். 

 கைதுசெய்யப்பட்டவரை பொலிஸார் நாளை அளுத்கடை மூன்றாம் இலக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும்  பொலிஸ் ஊடக பிரிவு மேலும் குறிப் பிட்டுள்ளது.