ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்தோனேசியா சென்றுள்ள ஜப்பான் அணியின் 4 வீரர்கள், இரவு விடுதி ஒன்றில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. 

ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், ஜப்பான் நாட்டின் கூடைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 4 வீரர்கள் போட்டி நன்னடத்தை விதிகளை மீறியதற்காக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜப்பானுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழன் அன்று கட்டாருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய பின்னர், ஹோட்டல் ஒன்றுக்கு அணியின் சீருடையுடன் சென்றுள்ள குறித்த 4 வீரர்களும் மது அருந்தியுள்ளனர். அப்போது, ஜப்பானை சேர்ந்த உள்ளூர் பெண் அவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். 

இதனை அடுத்து, 4 பெண்களுடன் ஹோட்டல் அறைக்குள் நுழைந்த 4 வீரர்களும் மறுநாள் காலை வரை அங்கு இருந்துள்ளனர். விளையாட்டு கிராமத்தை விட்டு வெளியேறி போட்டி விதிமுறைகளை மீறிய அந்த 4 வீரர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை குழு விசாரணையை ஆரம்பித்தது. 

அதற்கு முன்னதாக அவர்கள் தொடரை விட்டு வெளியேற்றப்பட்டு ஜப்பானுக்கு திரும்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் மீதான விசாரணை முடிந்த பின்னர், தண்டனை அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடந்த ஆசிய போட்டியின் போது, பத்திரிகையாளர் ஒருவரின் உடமையை திருடிய ஜப்பானை சேர்ந்த நீச்சல் வீரர் தோமிடா 18 மாத தடைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.