தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனையே களமிறக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைமைக்கு தாம் வலியுறுத்தி வருவதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தெரிவித்துள்ளது. 

 கூட்டமைப்பை விட்டு விக்னேஸ்வரன் வெளியேறுவது என்பது தமிழ் மக்களுக்கு பாரிய ஆபத்தை தேடிக் கொடுக்கும் செயலாகும்என்று சுட்டிக்காட்டியுள்ள ரெலோவானது இவ் விடயத்தை கூட்டமைப்பின் தலைமைக்கும் அதேபோன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் வடக்கு மகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக ரெலோவின் நிலைப்பாடு குறித்து அதன் தலைவரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிரசா என பரவலாக கூறப்பட்டு வந்தாலும் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் இணைந்து அது தொடர்பான இறுதி முடிவை எடுக்கவில்லை. இன்னமும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக சரியான முடிவினை கூட்டமைப்பு எடுக்கவில்லை. 

எமது கட்சியைப் பொறுத்த வரையில் தற்போதுள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையே மீளவும் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக களமிக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துவதுடன் இதனையே கூட்டமைப்பின் தலைமைக்கும் எடுத்துரைத்துள்ளோம். 

கூட்டமைப்பை விட்டு சி.வி.விக்னேஸ்வரன் பிரிந்து செல்வதானது தமிழ் மக்களுக்கு பாரிய ஆபத்தினை ஏற்படுத்திவிடும் என்பதனை கூட்டமைப்பின் தலைமைக்கும் அதேபோன்று விக்கினேஸ்வரனுக்கும் நாம் வலியுறுத்தியுள்ளோம். எனவே ஒற்றுமை என்பது வலியுறுத்தப்பட வேண்டும். 

மேலும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதையும் எமது கட்சி வலியுறுத்தி வருகின்றது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களது வாக்குகள் பிரிக்கப்படாத ஒன்றிணைந்த ஆட்சியே நடைபெற வேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடாகும். 

இந் நிலையில் இருந்து நாம் விலகி பிரிந்து செல்வோமாக இருந்தால் வடக்கில் தேசியக் கட்சிகளினுடைய ஆதிக்கம் அதிகரித்து விடும். குறிப்பாக தற்போது இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களில் புதிய தேர்தல் முறையின் காரணமாக தேசியக் கட்சிகள் பல ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இந்நிலையில் நாமும் பிரிந்து நிற்போமாக இருந்தால் இத் தேசியக் கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்கா விட்டாலும் கூட்டாட்சி அமைக்கின்ற பலத்தினை பெற்று விடுவார்கள். 

இதற்கு எமது பிரிவு காரணமாகிவிடும். கிழக்கிலும் இதே நிலையே காணப்படுகின்றது எனவே நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். 

இந் நாட்டிலே நீண்ட காலமாக புரையோடிப்போய்யுள்ள இனப் பிரச்சினையானது தீர்க்கப்பட வேண்டும் என்று மனப்பூர்வமான சிந்தனை கொண்ட அனைத்துத் தரப்புக்களும் இணைந்து எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். வெறுமனே மக்களது விடுதலை எனக்கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது. எமது பிரிவு வடக்கு கிழக்கில் சிங்கள பேரினவாதக் கட்சிகள் கால் ஊன்றுவதற்கு சந்தர்ப்பமாக அமைந்து விடக்கூடாது என்பதுடன் அது எமக்கு பாரிய ஆபத்தாக அமையும் என்பதே எமது நிலைப்பாடாகும்.