இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மூன்று முக்கிய வேட்பாளர்கள் களமிறங்க கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கியதேசிய கட்சி சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் களமிறங்குவது உறுதியாகியுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இலங்கையின் அரசமைப்பு ஏற்பாடுகளிற்கு நீதிமன்றம் எவ்வாறான விளக்கம் கொடுக்கின்றது என்பதே  மகிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிடமுடியுமா என்பதை தீர்மானிக்கப்போகின்றது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரையில் 19 வது திருத்தம் காரணமாக மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது என கருதப்பட்ட நிலையில் பொது எதிரணியின் தலைவர்களி;ன் சந்திப்பின் போது அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களிற்கு மேல் பொதுஎதிரணியின் முக்கிய தலைவர்கள் இது குறித்து ஆராய்ந்து வந்துள்ளனர்,அவர்கள் சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்துள்ளதுடன்  தேர்தல் ஆணையாளரையும் சந்தித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பொது எதிரணியின் தலைவர்களின் கூட்டத்தில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் 19 வது திருத்தம் தற்போதைய ஜனாதிபதியையே கட்டுப்படுத்தும் முன்னாள் ஜனாதிபதிகளை கட்டுப்படுத்தாது என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இரண்டு தடவைகள் மாத்திரமே போட்டியிட முடியும் என்ற கட்டுப்பாடுகள் முன்னைய ஜனாதிபதிகளிற்கு பொருந்தாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரஜையொருவர் மாவட்ட நீதிமொன்றை இது தொடர்பில் நாடமுடியும்,அதனை தொடர்ந்து மாவட்ட நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரும் உச்சநீதிமன்றம் தனது முடிவை இரண்டு மாதங்களிற்குள் வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள பீரிஸ் இலங்கை பிரஜையொருவர் இது தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்து மகிந்த ராஜபக்ச நான் நீதிமன்றங்களிற்கு அலைவதற்கு தயாரில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜிஎல்பீரிசின்  கருத்தை முன்னாள் அமைச்சர் ஜோன் செனிவரட்னவும் வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக இது தொடர்பில் தீவிரமாக ஆராயவேண்டும் என்ற இணக்கப்பாடு பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை மகிந்த ராஜபக்ச தான் மூன்றாவது முறையும் பதவி வகிக்க ஆசைப்படுகின்றேன் என்ற கருத்து உருவாகும் விதத்தில் செயற்படுவதற்கு தயாரில்லை என்பதும் இந்த சந்திப்பின் மூலம் புலனாகியுள்ளது.

அவர் பொது எதிரணியின் தலைவர்களை இந்த விடயத்தை கையாள்வதற்கு அனுமதிப்பார் என அவரின் சகாவொருவர் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி இணையத்தளம்