மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் தற்போது தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்  தமது  குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு கிலோ மிற்றர் தொலைவில் உள்ள ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போதும், அப்பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக முள்ளிக்குளம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முள்ளிக்குளம் கிராம மக்கள் பல வருடங்களாக குறித்த ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மீன் பிடித்தல்,மட்டி மற்றும் குவாட்டி போன்றவற்றை பிடித்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தனர்.

இடம் பெயர்ந்த முள்ளிக்குளம் கிராம மக்கள் மீண்டும் முள்ளிக்குளம் கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் மீள் குடியேறினர்.

முள்ளிக்குளம் ஆலயத்திற்கு சற்றுத் தொலைவில் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். குறித்த மக்கள் விவசாயம்,தோட்டம்,மீன் பிடி போன்ற தொழில்களை மேற்கொண்டு வந்தனர்.

தற்போதைய நிலையில் ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஆற்றில் மீன் பிடிக்கச் செல்பவர்களை பிடித்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தாக்குவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த ஒரு சிலரை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிடித்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அபராதம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வாழ்வாதாரத்திற்கு கஸ்டப்படும் முள்ளிக்குளம் மக்கள் குறித்த ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நிலையில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதி இங்கு மீன் பிடிக்க முடியாது என கூறி எங்களை தாக்கி அச்சுரூத்துகின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடையத்தில் தலையிட்டு குறித்த பகுதியில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முள்ளிக்குளம் கிராம மக்களை குறித்த ஆற்றில் எவ்வித தடையும் இன்றி மீன் பிடிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.