போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேசம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்து எமது நாட்டையும் இராணுவத்தையும் காப்பாற்றும் வகையில் எமது நகர்வுகள் அமையுமே தவிர எவரையும் காட்டிகொடுக்கும் வகையில் அமையாது. ஆனால் போர்க்குற்றசாட்டுக்கள் தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் நீதிமன்ற தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.  

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கும் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவில்லை. அதேபோல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எவரையும் இன்று கைது செய்யவுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில்  தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

பயங்கரவாத தடைச்சட்டம் கடந்த காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. அப்போதைய சூழலில் அது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பிரதான காரணியாக காணப்பட்டது. ஆனால் யுத்தத்தின் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருந்த போதிலும் எவரையும் அநாவசியமாக கைதுசெய்யும் சூழல் மிகவும் குறைவானதாகவே இருந்தது.   ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த ஒருவருட காலத்தில் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை. மக்களும் எந்தவித அச்சமும் இல்லாது சுதந்திரமாக நடமாடும் சூழலை நாம் உருவாக்கிக் கொடுத்துள்ளோம். வடக்கில் இருந்தோ கிழக்கில் இருந்தோ தமிழ் மக்கள் எந்தவித தடைகளும் சந்தேகமும் இல்லாது நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் நிலைமை உருவாகியுள்ளது. 

எனினும் ஒரு சட்டத்தை உடனடியாக மாற்றி தேவைக்கு ஏற்ப எதையுமே செய்ய முடியாது.  பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் அரசாங்கம்  ஸ்திரமான தீர்மானத்தை இன்னும் எடுக்கவில்லை. எவ்வாறு இருப்பினும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விவாதங்களின் போது இந்த விடயங்களை ஆராய முடியும். ஆனால் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச மட்டத்தில் இன்றும் இருந்துவரும் அச்சுறுத்தல்களினால்  பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமாகும்.  

கேள்வி:- இலங்கையின் நீதிச் சேவை மற்றும் ஏனைய விடயங்களில் மாற்றத்தைக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்காவின் தொழினுட்ப வல்லுனர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறானது? 

பதில்:- இந்த கருத்து தொடர்பில் அரசாங்கம் விசேடமாக கருத்துகளை கூற வேண்டிய அவசியம்   இல்லை. எந்த சந்தர்ப்பத்திலும் எமது நீதிப் பொறிமுறையில் சர்வதேச தலையீடுகளை அனுமதிப்பதில்லை. இலங்கையில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் இரு தரப்பு்களிலும்   மோசமான இழப்புகளை சந்தித்தனர். தமிழ், சிங்கள், முஸ்லிம் என அனைத்து தரப்பு மக்களும் பாதுக்கப்பட்டனர். ஆனால் சர்வதேசம் குற்றம் சுமத்தும் அளவுக்கு எந்தவித குற்றங்களோ அல்லது மனித உரிமை மீறல்களோ இறுதி யுத்தத்தின் போது இடம்பெறவில்லை. எமது இராணுவத்தினால் மனிதாபிமான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறான நிலையில் எமது இராணுவத்தை போர்க் குற்றவாளிகள் என அடையாளப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். 

எனினும் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள சந்தேகம், போர்க்குற்றம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை நிவர்த்து செய்து எமது பாதுகாப்பு தரப்பை நியாயப்படுத்தவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது. 

ஆனால் அவ்வாறு முன்னெடுக்கும் அனைத்து நடவைக்கைகளும் எமது உள்ளக பொறிமுறை மூலமாக மட்டுமே முன்னெடுக்கப்படும். சர்வதேச தலையீடுகள் இல்லாத எமது சுயாதீன விசாரணை பொறிமுறை மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. 

ஆகவே எமது நாட்டில் நீதி செயற்பாடுகள் மற்றும் உள்ளக பொறிமுறைகளில் எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்றார்.