இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்கியது. 

ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கொண்டாடப்படுவது ஆசிய விளையாட்டு போட்டி. இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.

18 வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், இலங்கை, மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

தடகளம், வில்வித்தை, டென்னிஸ், பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, கால்பந்து, நீச்சல், துப்பாக்கி சுடுதல் உள்பட 40 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

இந்நிலையில், இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஜி.பி.கே. அரங்கில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது.

கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள், லேசர் ஒளி வெள்ளத்தில் வியப்பூட்டும் சாகசங்கள், வானவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெற்றன. 4 ஆயிரம் கலைஞர்கள் தொடக்க விழாவில் ரசிகர்களை பரவசப்படுத்தினர்.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து சென்றனர். 

இந்தோனேசியா ஆசிய விளையாட்டு போட்டியை நடத்துவது இது 2 வது முறையாகும். இதற்குமுன் 1962 ஆம் ஆண்டு அங்கு இந்த போட்டி நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.