ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மீண்டும் மண்சரிவு அபாயநிலையால் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஸ்டிரதன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயநிலை காரணமாக நேற்று காலை அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டு, மண்சரிவு அகற்றப்பட்டபின் வழமைக்கு திரும்பின. 

தொடர்ந்தும் நேற்று மாலை அவ்வீதியில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவுடன் வீதி முற்றாக மூடப்பட்டது இதனால் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து வீதி அதிகார சபையினரும், ஹட்டன் பொலிஸாரும் இணைந்து அவ்வீதிக்கு அருகில் புதிய வீதியினை அமைத்து நேற்று இரவு 10 மணி முதல் அவ்வீதியில் ஒரு வழி போக்குவரத்தாக மாற்றி அமைத்தனர். 

அதன் பின் அவ்வீதியின் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றதாக தெரிவித்தனர்.

எனினும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வண்ணமே உள்ள நிலையில்   வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.