நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் கனா படத்தின் டீஸர் மற்றும் ஓடியோ இம்மாதம் 23 ஆம் திகதி வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

தொலைகாட்சி தொகுப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைக் கொண்டவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது முதன்முறையாக தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இவர் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘கனா.’ இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இளவரசு, ரமா, முனீஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் குறித்த படத்திற்கு தீபு நைனன் தோமஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார். படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அருண் ராஜா காமராஜ். 

சாதாரண குடும்பத்தில் பிறந்து துடுப்பாட்ட வீராங்கனையாக திகழவேண்டும் என்று எண்ணும் ஒரு பெண்ணின் இலட்சியம் நிறைவேறியதா? அல்லது சமூக அரசியல், விளையாட்டு உலக அரசியல், ஆணாதிக்க அரசியல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதா? என்பதை விவரிப்பதே இந்த கனா.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்க, அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடித்திருக்கிறார். படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் இதன் டீஸர் மற்றும் ஓடியோவை ஓகஸ்ட் 23 ஆம் திகதியன்று வெளியாகும் என்று தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.