முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தின் போது நான்கு கிலோ மீற்றர் தொலைவிற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் நடந்தே சென்றனர்.

வாஜ்பாயின் இறுதி சடங்கு நடைபெறும் ஸ்மிரிதி ஸ்தல் என்னுமிடத்தில் அவருக்கு முப்படைகளின் தளபதிகள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

இதற்கு முன்னதாக பா.ஜ.க.வின் தலைமையகத்திலிருந்து புறப்பட்ட வாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தின் போது நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நடந்து வந்தனர். வழி நெடுகிலும் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி சடங்கில் பூடான் மன்னர், நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாட்டிலிருந்து அமைச்சர்களும், பிரதிநிதிகளும் பங்குபற்றினர். ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியும் இறுதி சடங்கில் பங்குபற்றினார்.