உலகில் மிகப்பெரிய ஸ்ரோபெரி பீட்ஸா ; நுவரெலியாவில் தயாரிப்பு

Published By: Priyatharshan

17 Aug, 2018 | 04:31 PM
image

உலகில் மிக பெரிய ஸ்ரோபெரி பீட்ஸாவை தயாரிக்கும் முயற்சி, நுவரெலியாவில் கடந்த 17.08.2018 அன்று முன்னெடுக்கப்பட்டது. 

இந்த ஸ்ரோபெரி பீட்ஸாவிற்காக 200 கிலோகிராம் ஸ்ரொபெரி பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஸ்ரோபெரி பீட்ஸாவின் முழு எடை 1400 கிலோகிராமாகும். 

குறித்த பீட்ஸாவை 6000 பேருக்கு பகிர்ந்தளிக்க முடியும் என இதனை தயாரித்த பிரதம உணவு தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

25 அடி நீளமும், 6 அங்குல உயரத்தையும் கொண்டு இந்த பீட்ஸா தயாரிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா - கிரான்ட் நட்சத்திர விடுதியில் பணியாற்றும் பிரதம உணவு தயாரிப்பாளர் பிரியந்த வீரசிங்க மற்றும் விராஜ் ஜயரத்ன உள்ளிட்ட சுமார் 100 ஊழியர்கள் இணைந்து இதனை தயாரித்துள்ளனர்.

இந்த பீட்ஸாவை அறிமுகம் செய்யும் நிகழ்வில், சுற்றுலா சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்தனர். 

இலங்கையில் நுவரெலியாவில் மாத்திரம் உற்பத்தி செய்யப்படுகின்ற ஸ்ரோபெரியை, சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் நோக்குடனேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஸ்ரோபெரி செய்கையாளர்களை ஊக்குவிப்பதும், தமது இந்த முயற்சியின் நோக்கமாக அமைந்துள்ளதாக நுவரெலியா மாநகர சபையின் மேயர் சந்தன லால் கருணாரத்ன தெரிவித்துள்ளார். 

இந்த பீட்ஸாவை 17.08.2018 அன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

 உலகிலேயே மிக பெரிய உருளைகிழங்கு கேக்கை, குறித்த நட்சத்திர விடுதி நிர்வாகத்தினர் இதற்கு முன்னர் உற்பத்திசெய்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right