தனது நேர்மையான தாழ்மையுடன் கூடிய தலைமைத்துவத்தினால் இந்தியாவை வழிநடாத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

இன்று இந்தியா தனது ஒரு மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் ஒரு சிறந்த அறிவாளியுமான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யை இழந்துள்ளது. 

முன்னாள் பாரத பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான வாஜ்பாய், ஒரு மிகச்சிறந்த தலைவர் மட்டுமல்லாது அவரது தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா அநேக சாதனைகளை நிலைநாட்டுவதற்கும் வழிவகுத்தார்.

தனது நேர்மையான தாழ்மையுடன் கூடிய தலைமைத்துவத்தினால் இந்தியாவை வழிநடாத்திய வாஜ்பாய், உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான மக்களினால் நேசிக்கப்பட்ட மதிக்கப்பட்ட ஒரு தலைவராவார். 

மூன்று முறை இந்திய பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய், மிகச்சிறந்த பேச்சாளர் மட்டுமல்லாது நல்ல நகைச்சுவை உணர்வு மிகுந்த ஒருவருமாவார். இந்திய பாராளுமன்றத்திலும் வெளியிலும் அவர் ஆற்றிய உரைகள் என்றைக்கும் நினைவிலிருக்கும்.

இந்திய மக்களுக்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவையை பாராட்டி இந்திய அரசினால் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் விருதுகள்அவருக்கு வழங்கப்பட்டன. இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கும் , பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.