போருக்கு பின்னரான காலத்தில் எமது மக்கள் இழந்தவைகள் ஏராளம். அந்தவகையில் எவருடைய தலையீடும் இல்லாமல், எந்த இடையூறும் இல்லாமல் எமது மீனவர்கள் தங்கள் சுய பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கதன சந்தர்ப்பமாக தென்னிலங்கை மீனவர்களின் வெளியேற்றம் அமையும் என மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் தெரிவித்தார். 

முல்லைத்தீவு நாயாறு இறங்குதுறை பகுதியில் தங்கியிருந்த தென்னிலங்கை தென்னிலங்கை மீனவர்கள் நேற்று  மாலை அதியுச்ச பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியிலிருந்து வெளியேறியுள்ளார்கள்.

நாயாறு இறங்குதுறையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 8 வாடிகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் கடந்த 13ஆம் திகதி திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டது. 

இதயைடுத்து தென்னிலங்கை மீனவர்கள் நாயாற்றிலிருந்து வெளியேற்றப்படவேண்டும். என கோரிக்கை விடுத்த நிலையில் நேற்று மாலை நூற்றுக்கணக்கான பொலிஸ் பாதுகாப்புடன், தென்னிலங்கை மீனவர்கள் நாயாற்றிலிருந்து வெளியேறியுள்ளனர். 

தென்னிலங்கை மீனவர்கள் வெளியேறும் போது , தமிழ் மீனவர்களுக்கு நன்றி தெரிவித்தனர் எனவும், வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமது வருத்ததைத் தெரிவித்து மன்னிப்புக்கோரியதாகவும் தமிழ் மீனவர்கள் தெரிவித்தனர்.

இது  தொடர்பாக சம்பவ இடத்தில் நின்றிருந்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 13ஆம் திகதி தமிழ் மக்களுக்கு சொந்தமான வாடிகள் அநியாயமாக தீக்கிரையாக்கப்பட்டு இன்று அந்த மக்கள் தொழிலுக்கும் செல்ல முடியாமல் கையறு நிலையில் நிற்கிறார்கள். 

இந்நிலையில் மக்களும் அதனுடன் இணைந்து பல்வேறு தரப்புக்கள்  ஊடாகவும் நாங்கள் கோரிக்கையை முன்வைத்தோம். 

அதாவது, நாயாற்றிலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றப்படவேண்டும், கொளுத்தப்பட்ட நாசமக்கப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படவேண்டும். இது நிறைவேற்றப்படும் வரை பட்டினிசாவை எதிர்கொண்டாலும் பரவாயில்லை. எமது மீனவர்கள் தொழிலுக்கு செல்லமாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று மாலை மக்கள் என்னை அழைத்தார்கள் அதிகளவான பொலிஸார் வந்து நிற்பதாக.  அதனையடுத்து நான் நாயாறு பகுதிக்கு சென்றபோது அங்கே தென்னிலங்கை மீனவர்கள் தங்களுடைய பொருட்களை வாகனங்களில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பல நூற்றுக்கணக்கான பொலிஸாருடைய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

 

குறித்த நடவடிக்கையை யார் எடுத்திருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கிறோம். காரணம் மிக மோசமான போரை சந்தித்த மக்கள் மீள்குடியேற்றத்தின்போது எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமலேயே வந்தார்கள். 

குறித்த மக்களுடைய பொருளாதாரத்தை அல்லது வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் திட்டமிட்டு தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவுக்கு வரவழைக்கப்பட்டார்கள். அதற்கு மேலாக சட்டவிரோத தொழில்கள் அத்தனையையும் செய்வதற்கு அவர்களுக்கு பூரணமான அனுமதி கொடுக்கப்பட்டது. 

இதனால் போருக்கு பின்னரான காலத்தில் எமது மக்கள் இழந்தவைகள் ஏராளம். அந்தவகையில் எவருடைய தலையீடும் இல்லாமல், எந்த இடையூறும் இல்லாமல் எமது மீனவர்கள் தங்கள் சுய பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கான சந்தர்ப்பமாக தென்னிலங்கை மீனவர்களின் வெளியேற்றம் அமையும் என நாங்கள் நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.