(நா.தனுஜா)

தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தனியார் பஸ் சேவையாளர் சங்கத்தின் கோரிக்கைகளை தாங்களும் ஆதரிப்பதாகவும், ஆனால் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களின் நலன்கருதி வேலைநிறுத்தத்தில் இணைந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் வேலை நிறுத்தத்தில் இணைந்துக்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

தனியார் பஸ் சேவையாளர்கள் சங்கத்தினர் மேற்கொண்டிருக்கும் வேலை நிறுத்தத்தின் விளைவாகத் தோன்றியிருக்கும் நிலவரங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக மருதானை சமூக சமய நடுநிலையத்தில் செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த விஜேரத்ன மேலும் குறிப்பிடுகையில்,

"போக்குவரத்து ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு அதிகரித்த தண்டப்பணம் விதிக்கப்படுவதற்கு எதிராகவே மேற்படி சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தண்டப்பணத்தைக் குறைப்பது நடைமுறைச் சாத்தியமானதல்ல. ஆனால் அவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் நியாயமான வேறு கோரிக்கைகளை நாம் ஆதரிக்கின்றோம். 

போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் வீதிகளைப் புனரமைத்தல், பஸ் சாரதிகளுக்கான கழிப்பறை வசதிகளை பிரதேசவாரியாக அமைத்தல், தேவையற்ற விதி முறைகளை நீக்குதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு, உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததும் நாமும் வேலைநிறுத்தத்தில் இணைந்து கொள்வோம்." என்று கூறியுள்ளார்.