பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து.வெற்றிமாறனும், தனுஷூம் ‘வடசென்னை’யில் இணைந்திருக்கிறார்கள். இவர்களுடன் குணாவாக சமுத்திரகனியும் தோள் கொடுத்திருக்கிறார். அதே போல் நடிகை ஆண்ட்ரியாவும் சந்திராவாக மாறி உதவி செய்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களின் பட்டியலில் தனுஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் வடசென்னையும் ஒன்று. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு டீஸரும் வெளியாகி பல மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை புரிந்து வருகிறது.

குறித்த படத்தை தனுஷ் தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார். இதில் தனுசுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, ஆண்ட்ரியா, அமீர், டேனியல் பாலாஜி,கிஷோர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் குறித்த படத்தினை விளம்பரத்துவதற்காக இப்படத்தில் நடித்த முக்கியமான கதாபாத்திரத்தை முன்னிறுத்தி போஸ்டர் டிசைன் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது இந்த படத்தில் குணா என்ற கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் சமுத்திரகனியின் தோற்றத்தையும், சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆண்ட்ரியாவின் தோற்றத்தையும் போஸ்டராக வெளியிட்டிருக்கிறர்கள் படக்குழுவினர்.