கம்பாஹாவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறும் நிலையம் ஒன்றில்,  உயர்த்தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த பரீட்சார்த்தி ஒருவர், தனது கையடக்கத் தொலைபேசியை தன்வசம் வைத்துக் கொண்டு பரீட்சை எழுதிய சம்பவம்  தொடர்பில்,  விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென,  பரீட்சைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது. 

    தற்பொழுது நடைபெறும் க.பொ.த. உயர்தரப்  பரீட்சையில் வினாவுக்கு பதிலளிக்கும் போது, கம்பாஹா பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன்  கையடக்கத்  தொலைபேசியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே, இவ்வாறு  விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக  பரீட்சைகள்  திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

  குறித்த விசாரணைகள்,  பரீட்சை நிறைவடைந்த பின்னர் உடனடியாக ஆரம்பமாகும் என்று, பரீட்சைகள்  ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

   அதுவரையில் பரீட்சை எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எந்தவிதத்  தடைகளும் ஏற்படாதவாறு, குறித்த  மாணவனுக்கு  இப் பரீட்சையை  எழுதுவதற்கு  சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம்  குறிப்பிட்டுள்ளார்.  

 இருப்பினும், இது தொடர்பிலான  விசாரணையின்போது, கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன்  குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால்,  இம்மாணவனுக்கு எதிராக அதி உச்சபட்ச  தண்டனை வழங்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.    இச்சம்பவம், கடந்த (13) திங்கட்கிழமை கம்பஹாவில்  இடம்பெற்றுள்ளது.