இந்தியாவிலிருந்து 57 ஆண்டுகளுக்கு முன்னபாக திருடப்பட்ட 12 ஆம் நூற்றாண்டைச் வெண்கல புத்தர் சிலையொன்றினை லண்டன் பொலிஸார் இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளனர். 

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த வெண்கல புத்தர் சிலையானது பீகார் மாநிலத்தின் நாளந்தாவிலுள் உள்ள தொல்லியத் துறை அங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இந்த புத்தர் சிலையானது கடந்த 1961 ஆம் ஆண்டு களவாடப்பட்டது.

இந் நிலையில் லண்டனில் நடந்த வர்த்தக கண்காட்சியொன்றில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தபோது இங்கிலாந்து கலைப்பொருட்கள் குற்றப்பிரிவு பொலிஸாரும் இந்தியா பிரைட் புராஜெக்ட் என்னும் அமைப்பைச் சேர்ந்த விஜய் குமார் என்பவரும் இந்த வெண்கல புத்தர் சிலை நாளந்தாவில் இருந்து திருட்டுப்போன அதே புத்தர் சிலைதான் என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து லண்டன் நகரின் ஸ்கொட்லாந்து யார்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சட்டபூர்வமாக இந்த சிலையை மீட்டெடுத்த பின்பு லண்டனில் நேற்று நடந்த இந்திய சுதந்திர தின நிகழ்வின் போது முறைப்படி அங்குள்ள இந்திய தூதரக உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைக்கப்பட்டது.