இங்கிலாந்துக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவியதால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நீக்கிவிட்டு டிராவிட்டை நியமிக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எந்தவித போராட்டமும் இல்லாமல் இந்திய வீரர்கள் சரணடைந்தமையினால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.
முன்னாள் வீரர்கள் இந்திய அணி மீது கடுமையாக பாய்ந்தனர். இதேபோன்று ரசிகர்களும் கடும் அதிருப்தியடைந்தனர். மோசமான தோல்வி தொடர்பாக அணித் தலைவர் விராட் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் விளக்கம் கேட்க கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்து புறப்பட்டுச் செல்லும் முன்பு ரவி சாஸ்திரியும் கோஹ்லியும், "எந்தக் களத்தையும், எந்த அணியையும் சந்திப்போம். தயக்கமில்லை" என்று தெரிவித்திருந்தனர்.
தற்போது ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக விராட் கோஹ்லி ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். தங்கள் மீதான நம்பிக்கையை ரசிகர்கள் இழக்க வேண்டாம். நாங்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று கோஹ்லி கூறியுள்ளார்.