இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். கச்சேரி  வீதியிலுள்ள இந்திய இல்லத்தில் யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில்  இன்று புதன்கிழமை   காலை  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

 யாழ். இந்திய உயர்ஸ்தானிகர் இந்திய தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுதந்திரதின உரையினை உயர்ஸ்தானிகர் வாசித்ததுடன், வடக்கில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள்  , மக்களுடனான  தொடர்பாடல் மற்றும் இந்திய புலமைப் பரிசில்கள் பற்றியும்   உரையாற்றினார்.

உரையினைத்  தொடர்ந்து  யாழ் பல்கலைக்கழக நடனத்துறையினரின்  "பாரத சுதந்திரம்" நாட்டிய நாடகம்  இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது. 

குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள், கலைஞர்கள், உட்பட  பலர் கலந்துக் கொண்டனர்