இலங்கைகான இவ்விஜயம் இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் காணப்படுகின்ற வலுவான இராஜதந்திர உறவுகளுக்கு சாட்சியாவதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவதனை இலக்காக் கொண்டுள்ளது என பாகிஸ்தான் பி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் தளபதி அசஹர் மெஹ்முத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வுகள் மிகவும் வர்ணமயமான வகையில்  சுதந்திர தின நிகழ்வுகளிற்கு இணையாக  நேற்று (14) கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெற்றது. இதன் போதே கப்பற் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜின ரணதுங்க இந்நிகழ்வுகளிற்கு பிரதம அதிதியாக கலந்து  கொண்டார். இலங்கை கடற்படையின் தளபதி. வைஸ் அட்மிரல் எஸ்.எஸ் ரணசிங்க, முப்படைகளின் அதிகாரிகள், இராஜதந்திரிகள், பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகத்தின் அதிகாரிகள், வெவ்வேறு துறைகளினை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

விருந்தினர்களை வரவேற்கையில் கப்பற் தளபதி அசஹர் மெஹ்முத் பின்வருமாறு கருத்து தெரிவித்தார். 

“இவ்விஜயம் இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் காணப்படுகின்ற வலுவான இராஜதந்திர உறவுகளுக்கு சாட்சியாவதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவதனை இலக்காக் கொண்டுள்ளது”. கேப்டன் அசஹர் மெஹ்முத் கப்பல் தரித்திருந்த காலப்பகுதியில் தங்களுக்கு வழங்கப்பட்ட சிறந்த விருந்தோம்பல் மற்றும் வரவேற்பிற்காக இலங்கை அதிகாரிகளுக்கு நன்றி கூறினார்.

பிரதம அதிதியான அமைச்சர் அர்ஜின ரணதுங்க கூறியதாவது. “எனது நெருங்கிய நண்பர் திரு. இம்ரான்கான் பாகிஸ்தானிய் பிரதமராக பதவியேற்கப்போவது மிகவும் பெருமைக்குரிய தருணமாகும். இம்ரானின் தலைமைத்துவத்தின் கீழ் இருநாடுகளினதும் உறவுகள் மேலும் அபிவிருத்தி பெற்று அடுத்த கட்டத்தினை அடையும் என நம்பிக்கை கொள்கின்றேன்;”

பாகிஸ்தானிய பதில் உயர் ஸ்தானிகர் ஜான்பாஸ் அவரது சுருக்கமான உரையிலே பின்வருமாறு கூறினார். இருநாடுகளும் அனைத்து துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பாரம்பரிய உறவுகளை தொடர்ந்தும் பேணுகின்றமை மிகவும் திருப்திகரமானதாகும். 

இரு நாடுகளினதும் அரசியல் தலைவர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் கடந்த 70 வருடங்களில் இருநாடுகளும் அபிவிருத்தி, முன்னேற்றம், செழிப்பினை அடைந்துள்ளன. பாகிஸ்தான் பி.எம்.எஸ் காஸ்மீர்  கடற்படைக் கப்பலின் வரவேற்ப்பு பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற தினத்திலே இடம்பெற்றமை பெருமைக்குரிய விடயமாகும்”. அத்துடன் தனது கன்னி பயணத்தினை இலங்கையின் நீர்ப்பரப்பிலே நிகழ்த்திய பி.எம்.எஸ் காஸ்மீரின் தளபதி மற்றும் குழுவினரை பதில் உயர் ஸ்தானிகர் வரவேற்றார்.

பின்னர், இலங்கை பாகிஸ்தான் நட்புறவினை பிரதிபலிக்கும் வகையில்  கேக்கை  இலங்கை கடற்படையின் தளபதி, பாகிஸ்தானிய பதில் உயர் ஸ்தானிகர் ஜான்பாஸ் கான் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரால் இணைந்து வெட்டப்பட்டது.