இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.என்.என். தரஞ்சித் சிங் சந்து தல‍ைமையில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் இலங்கை - இந்தியாவின் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் இலங்கை வாழ் இந்தியப் பிரஜைகள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் கலந்துகொணடு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இன்று கொண்டாடப்படுகின்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தினமானது மகாத்மா காந்தியின் 150 ஆவது நினைவு தினத்தை நினைவூட்டுவதாக அமைகின்றது.

நாம் அனைவரும் அவரது கொள்கைகளை வாழ்நாளில் பின்பற்றி செயற்பட வேண்டும். அத்துடன் இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அந்த வகையில் நாம் ஏனைய நாடுகளுக்கு எம்மாலான சகல உதவிகளையும் செய்து வருவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந் நிகழ்வில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுப்புற கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.