அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் கிறிஸ்தவ மதகுருமார்கள்  கடந்த 70 வருட காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்ததாக விசாரணை அறிக்கையொன்று குற்றம்சாட்டியுள்ளது.

இந்த அறிக்கையை பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

கடந்த 18 மாதகாலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ள விசாரணை குழுவொன்று 300 கிறிஸ்தவ மதகுருமார் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

தேவாலயங்களின்  ஆவணங்கள் மூலம் துஸ்பிரயோகத்திற்கு உட்பட ஆயிரக்கணக்கான சிறுவர்களை அடையாளம் காணமுடிவதாக விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஆறு கிறிஸ்தவ திருச்சபைகள் மீதே இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ள அதிகாரிகள் சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களை கிறிஸ்தவ  மதகுருமார் மறைத்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கி;ல் இருக்கலாம் அவர்கள் குறித்த ஆவணங்கள் தொலைந்துபோயிருக்கலாம் அல்லது அவர்கள் உண்மையை தெரிவிக்க அச்சப்பட்டிருக்கலாம் எனவும் விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இளம் சிறுவர்கள் சிறுமிகள் பதின்மவயதினர் மதகுருமாரினால்  துஸ்பிரயோகம் செய்யப்பட்டனர்,தேவாலயங்களின் முக்கிய பொறுப்பிலிருந்தவர்கள் குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக இவற்றை மறைத்தனர் அல்லது அலட்சியம் செய்தனர் எனவும் விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ தேவாலயங்களின் சிரேஸ்ட மதகுருமார் இவற்றை மறைத்துள்ளதன் காரணமாக இவை பழைய சம்பவங்களாக உள்ளன இதனால் இவற்றை விசாரணை செய்ய முடியாது எனவும் விசாரணையை மேற்கொண்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கத்தோலிக் திருச்சபை குறித்து உலகநாடுகள் பலவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.

2016 இல் முதல் குறிப்பிட்ட குழுவினர் ஆயிரக்கணக்கானவர்களை சந்தித்துள்ளதுடன் 500,000இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை ஆராய்ந்துள்ளனர்