(இராஜதுரை ஹஷான்)

தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள குழுக்களை போன்று வடக்கில் இயங்குகின்ற ஆவா குழுவினர் பயங்கரமானவர்கள் அல்ல என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென் மாகாணங்களில் பாதாள குழுவினரது சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. வெளிநாடுகளில்  தலைமைறைவாகியுள்ள பாதாள குழு தலைவர்களை நாட்டுக்கு கொண்டு வருதற்கு இராஜதந்திர மட்டத்தில்  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே வெகு விரைவில் பாதாள குழுக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். 

அத்துடன் தென்னிலங்கையில் செயற்படுகின்ற  பாதாள குழுக்களை போன்று  வடக்கில் இயங்குகின்ற  ஆவா குழுவினர் பயங்கரமானவர்கள்  அல்ல  ஆவா குழுவினர் பெரும்பாலும் 20 வயதிற்குட்பட்டவர்கள். இவர்களுக்குள் இடம் பெறும் முரண்பாடுகள்  பெரிதுப்படுத்தப்படுகின்றது. 

தென்னிந்திய திரைப்படங்களில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை பின்பற்றியே இவர்கள் செயற்படுகின்றனர்.  இக்குழுவினர் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விசேட திட்டங்கள் வடக்கில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் நாட்டில் இடம்பெறும் போதைபொருள் குற்றச் செயல்களை முற்றாக ஒழிப்பதற்கு மரண தண்டனையினை நடைமுறைப்படுத்தியாக வேண்டும். இவ்விடயம் தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்தில்  இருந்து அரசாங்கம் ஒரு போதும் பின்வாங்காது என்றார்.