தேர்தல்களை திசைத்திருப்பும் வல்லமை படைத்தவர் மு க அழகிரி என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்..

இது தொடர்பாக அவர் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

‘கருணாநிதி இறுதி சடங்கில் பங்கேற்ற அமைச்சரின் கார் கண்ணாடி சேதபடுத்தப்பட்டது. அது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கவே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருணாநிதி இறுதி சடங்கில் பங்கேற்காமல் இருந்திருக்கலாம். 

அ.தி.மு.க., தி.மு.க. பகைமைதான் அவர்களுக்கு பலமாக இருக்கிறது. பதக்கம், விருது தருவதால், சிலை வைப்பதால் தலைவர்கள் கவுரவபடுத்தப்படுவார்கள் என்றில்லை. தலைவர்கள் செய்த நன்மைகளை எடுத்து கொண்டு அதன் வழி நடக்க வேண்டும். 

மு.க.ஸ்டாலின் மாநகராட்சி தலைவராக, அமைச்சராக, துணை முதல்வராக இருந்தவர். கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக திறம்பட செயல்படுகிறார். ஆகவே தி.மு.க.வில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு எடுப்பார்கள். மு.க.அழகிரி தி.மு.க. தலைவர் கருணாதியின் மூத்த மகன். 

தி.மு.க. வளர்ச்சியில் அதிகம் பங்காற்றியவர். பல இடைத்தேர்தல், பொதுத் தேர்தல்களில் தி.மு.க.வை வெற்றி பெற செய்தவர். தேர்தலை திசை திருப்பும் வல்லமை மிக்கவர் மு.க.அழகிரி. 

எந்த கட்சியையும் உடைக்கும் எண்ணம் பா.ஜனதாவுக்கு கிடையாது. ஜனநாயக முறையில் பா.ஜனதா வளர்ச்சி நோக்கி அடியெடுத்து வைக்கும். தமிழகத்தில் முதல் நிலைக்கு வரும். வருகிற தேர்தலில் பா.ஜ.க. அமைப்பது முதன்மையான வெற்றிக் கூட்டணியாக அமையும். ’ என்றார்.