(எம்.மனோசித்ரா)

எதிர்கட்சி தலைவர் தொடர்பில் சபாநாயகரின் தீர்மானமானது சட்டத்திற்கு உட்பட்டதாகவும், அரசியலமைப்பிற்கு ஏற்புடையதாகவுமே காணப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு கூட்டு எதிர்கட்சி கோரியிருந்தது. இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டதான தீர்ப்பினையே வழங்கியுள்ளார். 

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

"இது தொடர்பாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அனைவரது கருத்துக்களிலும் கவனம் செலுத்தியதோடு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலளார் என்ற அடிப்படையில் என்னுடைய கருத்தினைக் கோரி கடிதம் அனுப்பியிருந்தார். அது தொடர்பில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டு, அரசியலமைப்பிலுள்ள விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து எமது நிலைப்பாட்டினை அறிவித்தோம். 

பொது எதிரணியினர் எதிர்கட்சி என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலமைப்பின் படி கூட்டு எதிர்கட்சியினர் ஒரு போதும் எதிர்கட்சி ஆக முடியாது. காரணம் அக்கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களாகவும் காணப்படுகின்றனர். 

மேலும் அரசாங்கத்தில் எதிர்கட்சி தலைவராக இருப்பவருக்கு எந்தவித விஷேட சலுகைகளும் வழங்கப்படவும் மாட்டாது. அதற்கான வரப்பிரசாதங்கள் எதுவும் இல்லை. எனினும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காகவே அவர்கள் அதனைக் கோரியிருந்தனர். அவர்களுடைய இச் செயற்பாடு வெட்கப்பட வேண்டியதாகும். எனினும் எதிர்கட்சி தலைவர் பதவியை பெருவதாக இருந்தால் அதனை பாராளுமன்ற தேர்தலின் பின்னரே பெற முடியும். 

எவ்வாறிருப்பினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் அரசாங்கத்தை முன்னிலைப்படுத்தும். கட்சி அடிப்படையில் யாருக்கும் சலுகைககள் வழங்கப்பட மாட்டாது. தொடர்ந்தும் கட்சி சுயாதீனமாகவே செயற்படும்." என்றார்.