பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்காக நாரஹேன்பிட்டியில் உள்ள  முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  தேர்தல்கள் அலுவலகத்தின் சி.சி.டி.வி.காட்சிகளை புலனாய்வுப் பிரிவுக்கு கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ{க்கு தககல்  செய்த அறிக்கையை அடுத்தே நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தது. 

அதன்படி டக்ளஸ் தேவானந்தா  எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னதாக பாக் வீதி, இலக்கம் 121, கொழும்பு - 5 என்ற முகவரியில் உள்ள தனது அரசியல் அலுவலகத்தின் 2012.05.16 ஆம் திகதிக்குரிய சி.சி.டி.வி. பதிவுகள் அடங்கிய' வன் தட்டை' புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் கையளிக்க வேண்டும் என உத்தர்விடப்பட்டுள்ளது.

தாஜுதீன் விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிவான் நிஸாந்த பீரிஸ{க்கு விஷேட அறிக்கை ஒன்றினை தாக்கல்  செய்தனர். அதில் தமது மேலதிக விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவின் குறித்த அலுவலகத்தின் சி.சி.டி.வி. பதிவுகள் அடங்கிய வன் தட்டு அவசியம் என குறிப்பிட்டனர். இதனையடுத்தே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

முன்னதாக நாரஹேன்பிட்டி சந்தி மற்றும் கிருளப்பனை ஆகிய பகுதிகளில் இருந்து ஏற்கனவே கைப்பற்றப்பட்ட  வஸீம் தாஜுதீன் படுகொலை தொடர்பிலான சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமரா பதிவுகளை கனடாவில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு ஆய்வுக்காக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா எனும் நிறுவனத்துக்கு அனுப்ப இவ்வாறு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு  முதலாம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ{க்கு அறிவித்துள்ளது.

சர்வதேச பொலிஸார் ஊடாக முன்னெடுத்த நடவடிக்கையின் பலனாக கனடாவின் குறித்த நிறுவனத்துக்கு தெளிவற்ற  சி.சி.டி.வி. காட்சிகளை அனுப்பக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது. அத்துடன் குறித்த நிறுவனம் ஊடாக சி.சி.டி.வி. காட்சிகள் குறித்த ஆய்வு தொடர்பில் நேரடியாகவும் தொடர்புகளைப் பேணும் வாய்ப்பு உள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

 கடந்த வாரம் வஸீம் தாஜுதீன் கொலையாளிகளை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன் போது தெளிவற்ற சி.சி.டி.வி.காட்சிகளை எந்த சர்வதேச நிறுவனத்துக்கு அனுப்புவது என்பது குறித்து சர்வதேச பொலிஸார் மற்றும் வெளிவிவகார அமைச்சுடன் இனைந்து முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டது. இந் நிலையிலேயே அந்த சி.சி.டி.வி. காட்சிகளை கனடாவுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.