பாகிஸ்தான் எப்போதும் இலங்கையின்  தேசிய பாதுகாப்பு, ஜனநாயகம், சட்டவாட்சி மற்றும் பொருளாதார முன்னேற்றங்களுக்கு ஆதரவளிக்கின்றதுடன் இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் மக்களிற்கு சமாதானம், நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றங்களினை அடைவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றதென  இலங்கைக்கான பதில் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஜான்பாஸ் கான் தெரிவித்தார்.

இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகம் மற்றும் இலங்கை வாழ் பாகிஸ்தானிய சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானின் 72 ஆவது சுதந்திர தினத்தினை மிகவும் அர்ப்பணிப்புடன் கொண்டாடியது.

பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியக வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாகிஸ்தானிய தேசியக்கொடியானது பதில் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஜான்பாஸ் கானினால் ஏற்றிவைக்கப்பட்டது. இதன்போதே உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்நூன் ஹிசைனின் சுதந்திர தின  வாழ்த்துச் செய்தியானது  பதில் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஜான்பாஸ் கானினால் இதன்போது வாசிக்கப்பட்டது. 

பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்நூன் ஹிசைனின் சுதந்திர தின  வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“நமது முன்னோர்கள் பாகிஸ்தான் என்ற தேசத்தினை உருவாக்குவதற்காக இணையற்ற தியாகங்களால் மற்றும் தனித்துவமான போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

பாகிஸ்தானின் தேசபிதாக்களின் கனவுகளின்படி அதனை வடிவமைக்க வேண்டியது எமது பாரிய பொறுப்பாகும். அந்நோக்கத்தினை அடைவதற்கு  அனைத்து சமூகத்தினரிடையேயும் நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்வுறவு பேணப்படவேண்டும். 

எங்களுடைய சொந்த விருப்புக்களை ஒதுக்கிவைத்துகொண்டு ஒற்றை மனோபாவத்துடன் செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் அபிவிருத்தி மற்றும் கடந்தகால வெற்றிகளை புதுப்பிக்கமுடியும்.” என பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்நூன் ஹிசைனின் சுதந்திர தின  வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானிய பிரதமரின் ஓய்வுபெற்ற நீதிபதி நஸிர் உல் ஹக்கின் சுதந்திர தின வாழத்துச் செய்தியில், 

இயற்கையின் கொடைகளால் எமது நாடு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளமை நிதர்சனமான உண்மை. முக்கியமான புவிச்சரிதவியல் அமைவிடத்திலிருந்து உலகில் வெற்றிபெற்ற தேசமாக உயர்ச்சிபெறவும், எமது சொந்த விதியினை திறம்பட செதுக்கவும், எமது முற்போக்கான இளைஞர்கள் அதிசிறந்த திறமை பெற்றிருக்கின்றார்கள்.

 மேலும் முஹம்மத் அலி ஜின்னாவின் கொள்கைகளின்பால்  அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தின் கொள்கைகளை கடைப்பிடித்தல் நிகழ்கால சவால்களிலிருந்து மீளவும், பாகிஸ்தானை பொருளாதாரரீதியாக வலிமையாக்கவும் மற்றும் வளமான நாடாக உருவாக்கவும் துணைபுரியும்”. எனக் கூறப்பட்டிருந்தது.

பதில் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஜான்பாஸ் கான் இலங்கை பாகிஸ்தான் இருதரப்பு இராஜதந்திர உறவு குறித்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த தருணம் முதல் பாகிஸ்தான் இராஜதந்திர உறவுகளை நிர்மாணித்தது. பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பொது நலன்களின்  அடிப்படையில் அமைந்துள்ள இருதரப்பு உறவுகள் மென்மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எப்பொழுதும் இலங்கையின்  தேசிய பாதுகாப்பு, ஜனநாயகம், சட்டவாட்சி மற்றும் பொருளாதார முன்னேற்றங்களுக்கு ஆதரவளித்திருக்கின்றது. அத்துடன் இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் மக்களிற்கு சமாதானம், நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றங்களினை அடைவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு இலங்கை - பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக முதலீட்டு சங்கத்தின்  உறுப்பினர்கள், இலங்கை - பாகிஸ்தான் வர்த்தக சபையின் உறுப்பினர்கள், இலங்கை வாழ் பாகிஸ்தானிய பிரஜைகள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள்  கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.