இந்து சமுத்திரத்தில் சீனா தனது மூலோபாய முக்கியத்துவத்தை அதிகரித்து வரும் நிலையில் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக அமெரிக்கா இலங்கைக்கு 39 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.

வெளிநாட்டு இராணுவநிதியுதவியின் கீழ் இந்த தொகையை காங்கிரஸின் அனுமதித்தால் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வழங்கும் என கொழும்பிற்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இந்த பங்களிப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஆராயவுள்ளோம் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தோ பசுவிக் பிராந்தியத்தில் சுதந்திரமான வெளிப்படையான விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட ஒழுங்கமைப்பை உறுதிசெய்வதற்காக தென்னாசியா மற்றும் தென்கிழக்காசியா ஆகிய நாடுகளிற்கு வழங்கவுள்ள 300 பில்லியன் டொலர் நிதியுதவியின்  ஒரு பகுதியாகவே இலங்கைக்கு அமெரிக்கா இந்த நிதியை வழங்குகின்றது.

சீனா தனது புதியபட்டுப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் துறைமுகங்களிலும் ஏனைய உட்கட்டமைப்பு திட்டங்களிலும் முதலீடுகளை அதிகரிக்கும் நிலையிலேயே அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இலங்கையின் கடன்தொகை அதிகரித்து வருகின்ற போதிலும் தொடர்ந்தும் கடன்களை வழங்கதயார் என சீனா தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கியிருந்தது. குறிப்பிட்ட துறைமுகத்திற்காக பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையிலேயே இலங்கை இந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

உலகின் மிகவும் மும்முரமான கிழக்கு மேற்கு கடற்பாதையில் அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது.மேலும் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் நீண்டகாலமாக அமைந்துள்ள பகுதியில் சீனா காலூன்றுவதற்கான வாய்ப்பையும் இது வழங்கியுள்ளது.