(எம்.எம்.மின்ஹாஜ்)

கடன் சுமையுடன் கூடிய பொருளாதாரத்தை பொறுப்பேற்றதன் காரணமாக மக்கள் மீது அதிகளவான பாரத்தை சுமத்தி வரிகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்பிரகாரம் குருநாகல் மாவட்டத்திற்கான நீர் வழங்கும் திட்டம் பிரதமரினால் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அகில விராஜ் காரியவசம், காமினி ஜயவிக்கிரம பெரேரா உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்,

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடன் சுமையுடன் கூடிய பொருளாதாரத்தை பொறுப்பேற்றதன் காரணமாக மக்கள் மீது அதிகளவான பாரத்தை சுமத்தி வரிகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நாங்கள் மக்களின் விமர்சனங்களுக்கும் உள்ளானோம். 

எனினும் தற்போது பொருளாதாரத்தை சுமுகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். ஆகையினால் இனிமேல் மக்களிடம் தூற்றுதலுக்குள்ளாக வேண்டிய அவசியம் இல்லை.

அத்துடன் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியை நாம் பலப்படுத்த வேண்டும். நாட்டின் கடன் சுமை காரணமாக நாட்டின் பொருளாதாரம் சவால்மிக்கதாக காணப்பட்டது. அதனை கட்டியெழுப்புவதற்கே கடுமையான முயற்சிகளை முன்னெடுத்தோம். எனினும் தற்போது சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நிய செலாவணியின் ஊடாக கிடைக்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். முன்பை விடவும் அந்நிய செலாவணியை எம்மால் அதிகரிக்க முடிந்தது. இதற்கமைவாக ஏற்றுமதி வருமானத்தையும் நாம் அதிகரிக்க வேண்டியுள்ளது. ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும் போதுதான் நாட்டை சீரான நிலமைக்கு கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்தார்.