கடலில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள முக்கிய நகரம் ?

Published By: Digital Desk 4

13 Aug, 2018 | 05:41 PM
image

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரம் 2050 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நிபுணர் ஹென்றி ஆண்ட்ரியாஸ் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

பருவ நிலை மாற்றம் காரணமாக வட துருவத்திலுள்ள அண்டார்டிக்காவில் பனிக்கட்டிகள் உருகுகின்றன. கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது. இத்தகைய காரணங்களால் கடலோரத்தில் உள்ள நகரங்கள் கடலில் மெல்ல மெல்ல மூழ்கி வருகின்றன.

அவற்றில் அதிவிரைவாக மூழ்கி வரும் நகரமாக இந்தோனேசியாவின் ஐகார்த்தா திகழ்கிறது. இங்கு ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். ஜாவா தீவில் இது அமைந்துள்ளது. இந் நகரத்தில் 13 ஆறுகள் ஓடுகின்றன. கடல் நீரின் மட்டமும் அதிகரித்த படி உள்ளது.

இதன் காரணமாக இங்கு அடிக்கடி வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஜகார்த்தா நகரம் ஆண்டுக்கு ஒரு சென்றிமீற்றர் முதல் 1.5 சென்றி மீற்றர் வரை கடலில் மூழ்கி வருகிறது. தற்போது ஜகார்த்தாவின் பாதி அளவு கடல் மட்டத்துக்கு கீழே சென்று விட்டது.

கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்வதால் வடக்கு ஜகார்த்தா அதிகம் பாதிக்கப்படுகிறது. இதன் சில பகுதிகள் ஆண்டுக்கு 25 சென்றிமீற்றர் உயர்ந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் 2.5 மீற்றர் கடல் நீர் உயர வாய்ப்பு உள்ளது.

முயாரா பாரு மாவட்டத்தில் மீன்பிடி அலுவலக கட்டிடத்தின் தரைத்தளம் தண்ணீரில் மூழ்கி விட்டது. முதல் தளத்தின் வராந்தாவில் மட்டும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுத்தும் முயற்சி பலனளிக்கவில்லை.

ஜகார்த்தாவின் கடற்கரையில் அழகிய சொகுசு விடுதிகள் மற்றும் வீடுகள் உள்ளன. இவை உடனடியாக கடலில் மூழ்காவிட்டாலும் மெல்ல மெல்ல பாதிப்பு அடைந்து வருகிறது. அங்குள்ள கட்டிடங்களின் சுவர்கள் மற்றும் தூண்களில் 6 மாதத்துக்கு ஒரு முறை கீறல்கள் ஏற்படுகின்றன.

அதன் மூலம் வீடுகளில் உள்ள நீச்சல் குளங்களில் கடல் நீர் புகுந்து விடுகின்றது. வடக்கு ஜகார்த்தா மட்டுமின்றி அனைத்து பகுதிகளும் மெல்ல மெல்ல கடலில் மூழ்கி வருகிறது. மேற்கு ஜகார்த்தா ஆண்டுக்கு 15 சென்றிமீற்றரும், கிழக்கு ஜகார்த்தா ஆண்டுக்கு 10 சென்றிமீற்றரும், மத்திய ஜகார்த்தா ஆண்டுக்கு 2 சென்றிமீற்றர் அளவும், தெற்கு ஜகார்த்தா ஆண்டுக்கு ஒரு சென்றி மீற்றர் அளவும் மூழ்கி வருகிறது.

இதேநிலை நீடித்தால் 2050 ஆம் ஆண்டில் ஜகார்த்தா நகரம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என நிபுணர் ஹென்றி ஆண்ட்ரியாஸ் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right