இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வேறுபாடு அற்ற வகையில் சகல உரிமைகளையும் அனுபவிக்கும் பட்சத்தில் தாய் நாட்டின் மீதான ஆதரவும், அபிமானமும் மேலோங்கும் என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவியின் ஊடாக பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி புரம் கிராமத்தை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

நாட்டில் இன ஐக்கியத்துடன் உரிமைகளை பெற்றவர்களாக வாழக்கூடிய இலங்கையர்களை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமரின் கொள்கையாகும். அந்தவகையிலேயே சகல உரிமைகளையும் பெற்றவர்களாக ஏனைய மக்களுடன் மலையக மக்களையும் பிரதமர் இணைத்து செயல்பட இலக்காக கொண்டுள்ளார்.

150 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் மலையக பிரதேசங்களில் வாழும் தொழிலாளர்கள் அவர்களின் மூதாதையர்களும் நீங்களும் இந்த மண்னோடு போராடி மண்ணுக்கும் நாட்டுக்கும் தேயிலையின் ஊடான பெருமையை சேர்த்துள்ளீர்கள்.

மலையக பெருந்தோட்ட மக்கள் தமது வியர்வையை சிந்திய உழைப்பினால் நாட்டுக்கு கடன் இல்லாமல் வாழும் மக்களாக திகழ்கின்றீர்கள். ஆனால் ஆரம்ப காலத்தில் தோட்டப்புற மக்கள் இந்த நாட்டில் இந்த மண்ணில் பிறந்தவர்களும் அல்ல என்பதை நாங்கள் தெரிந்திருக்கின்றோம்.

ஆனால் இன்றைய நாளுக்கு பிறகு இந்த மண்ணில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் இந்த நாட்டுக்கும் இந்த மண்ணுக்கும் சொந்தமுடையவர்களாக மாற்றம் பெற்றுள்ளார்கள். தனக்கு உரிய வீடு, நிலம் என சொந்தம் கொண்டாடும் வாய்ப்பும் தாய் நாட்டின் மீதான சிநேகமும் வழுப்படும் நிலையும் காணப்படுகிறது என்றார்.