இந்திய அணிக்கு எதிரனா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 159 ஓட்டங்களினால் வெற்றியீட்டி ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 2:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டித் தொடர் லண்டனிலுள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் கடந்த 09 ஆம் திகதி ஆரம்பமானது. போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் போது இடைவிடாது மழை பெய்ததனால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந் நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் கடந்த 10 ஆம் திகதி ஆர்ம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றயீட்டிய இங்கிலாந்து அணி முதலில் களமிறங்குமாறு இந்திய அணியை பணித்தது. இதற்கிணங்க முதலில் களமிறங்கிய இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்களை எதிர்கொள்ள முடியாது 35.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சார்பில் அணித் தலைவர் விராட் கோலி 23 ஓட்டங்களையும், அஷ்வின் 29 ஓட்டங்களையும் ரகானே 18 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 20 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களையும் கிரிஸ் வோக்கஸ் 19 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களையும் புரோட் மற்றும் சாம் கரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந் நிலையல் மூன்றாம் நாளான நேற்றுமுன்தினம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை எதிர்கொள்ள களமிறங்கியது அதன்படி கிறிஸ் வோக்ஸ் விளாசிய சதத்தின் துணையுடன் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்களை இழந்து 357 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது மூன்றாம் நாள் நிறைவுக்கு வந்தது.

நான்காம் நாளான நேற்றைய தினம் தனது 357 ஒட்டங்களுடன் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி  ஏழு விக்கெட்டுக்களை இழந்து 396 ஒட்டங்களை குவித்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பாக நிதானமாக ஆடிய கிறிஸ் வொக்ஸ் ஆட்டமிழக்காது 137 ஓட்டங்களையும் ஜோனி பேர்ஸ்டோவ் 93 ஓட்டங்களையும் சாம் கரன் 40 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் மொஹமட் ஷமி, பாண்டியா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் இஷான் சர்மா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 289 ஓட்டங்களினால் பின்தங்கிய நிலையல் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் ராகுல் ஜோடி கடந்த இன்னிங்ஸை போன்று இந்த இன்னிங்ஸிலும் கோட்டை விட்டனர்.

அதன்படி முரளி விஜய் அண்டர்ஷனின் பந்து வீச்சில் ஓட்டம் எதுவும் பெறாது பேர்ஸ்டோவ் பிடிகொடுத்து ஆட்டமிழக்க ராகுல் அண்டர்ஷனின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து களம் விட்டு நீங்கினார்.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து களம் புகுந்த இந்திய அணியின் வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு அதிகநேரம் தாக்குப் பிடிக்காமல் ஆட்டமிழந்து களம் விட்டு நீங்கினர்.

அதற்கிணங்க புஜாரா 17 ஓட்டங்களுடன் புரோட்டினுடைய பந்தில் போல்ட் முறையிலும், அணித் தலைவர் விராட் கோலி 17 ஓட்டங்களுடனும், தினேஸ் கார்த்திக் டக்கவுட் முறையிலும் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 61 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இதன் பின் ஏழாவது விக்கெட்டுக்காக பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்து அஸ்வின் ஆட ஆரம்பிக் இருவரும் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க ஆரம்பித்தனர். இருப்பினும் இவர்கள் இருவரையும் வோக்ஸ் நீண்ட நேரம் பயணிக்க  விடவில்லை. அதற்கிணங்க அணியின் ஓட்ட எண்ணிக்கை 117 ஆக இருக்கும் போது வோக்ஸ் வீசிய பந்தில் பாண்டிய 26 ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து களம் நுழைந்த குல்தீப் யாதவ் மற்றும் ஷமி இருவரும் ஓட்டம் எதையும் பெறாமல் டக்கவுட் முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினர்.

இறுதியாக இந்திய அணி 47 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டு 159 ஓட்டங்களினால் படுதோல்வியை தழுவயது.

இந்திய அணி சார்பில் அதிகபடியாக அஷ்வின் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இன்ங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், புரோட் ஆகியோர் தலா 4  விக்கெட்டுக்களையும் வோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். 

இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி தொடரில் 2:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி இங்கிலாந்தின் நொட்டிங்காமிலுள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.