(ப. பன்னீர்செல்வம்)

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் இராணுவத்தில் ஆட்குறைப்பை மேற்கொள்ளமாட்டார் எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,பிரபாகரனின் “ஈழக் கனவு” நிறைவேறாது பிரபாகரன் மரணித்தது போன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்போரின் கனவும் “மரணித்துப் போகும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து எவரும் வெளியேறலாம் அதற்கு தடையில்லை. ஆனால் கட்சியை பிளவுப்படுத்தவும் தனிக் கட்சி அமைப்பதற்கும் சுதந்திரக் கட்சிக்குள்ளிலிருந்து கொண்டு முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு இடமளிக்க முடியாது.

அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

ஜனாதிபதி ஜனநாயகத்தை மதிப்பவர். எனவே தான் சுதந்திரக் கட்சியை சார்ந்தோருக்கு எதிர்க்கட்சியாக செயல்பட அனுமதி வழங்கினார். இல்லாவிட்டால் அரசுடன் தான் சுதந்திரக் கட்சியினர் இருக்க வேண்டுமென கடுமையான உத்தரவை பிறப்பித்திருக்கலாம்.

இது ஜனாதிபதியின் பலவீனமல்ல. ஜனநாயகமாகும். எனவே பொறுமைக்கும் எல்லையுண்டு. அது இன்று மீறப்பட்டுள்ளது. எனவே கட்சிக்குள் இருந்து கொண்டு புதிய கட்சியை ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை எவ்வாறு சுதந்திரக் கட்சியில் அமைப்பாளர்களாக தொடர்ந்து இருக்க அனுமதிக்க முடியும். எனவே தான் அமைப்பாளர் பதவிகள் பல பறிக்கப்பட்டன.