தென்னாபிரிக்காவிற்கு எதிரான இறுதிஒருநாள் போட்டியில்  தென்னாபிரிக்க அணியை தனது சுழலில் மூழ்கடித்த அகில தனஞ்செயவை இரும்பு மனிதர் என அணித்தலைவர் மத்தியுஸ் பாராட்டியுள்ளார்.

அகில இரும்பினால் செய்யப்பட்டவர்,முதல் இரு போட்டிகளில்  ஓட்டங்களை கொடுத்த நிலையில் அடுத்த போட்டியில் ஆறு விக்கெட்களைவ  வீழ்த்துவது மிகச்சிறப்பான விடயம் என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

அவர் கடந்த ஒரு வருட காலமாக இலங்கை அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகின்றார்,சில போட்டிகளில் அவர் பிரகாசிக்கத்தவறியிருக்கலாம் ஆனால் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிவருகின்றார் என தெரிவித்துள்ள மத்தியுஸ் இன்றைய போட்டியில் தன்னால் என்ன முடியும் என்பதை அவர் நிருபித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அகில தனஞ்செய ஆறு வருடங்களிற்கு முன்னரே இலங்கை அணிக்காக விளையாடியவர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள மத்தியுஸ் ஆறு வருடங்களிற்கு முன்னர் நீங்கள் பார்த்த அகிலதனஞ்செயவிற்கும் தற்போது நீங்கள் பார்க்கின்ற அகிலவிற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர் நல்ல தன்னம்பிக்கையுடன் பந்து வீசுகின்றார்,மேலும் தன்னிடம் உள்ள பலவகை பந்துகளையும் அவர் துல்லியமாக வீசுகின்றார்,இது பெரிய மாற்றம் என மத்தியுஸ் குறிப்பிட்டுள்ளார்.இதேவளை அகில தனஞ்செயவின் பந்து வீச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாபிரிக்காவின் குயின்டன் டி கொக் இன்று அவரை ஆடுவது கடினமானதாக காணப்பட்டது,இரவில் அவர் மிகச்சிறப்பாக பந்து வீசி எங்களை திணறச்செய்தார் என குறிப்பிட்டுள்ளார்.