அகில தனஞ்சய அளித்த அதிர்ச்சி வைத்தியம் காரணாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இலங்கை 178 ஓட்டங்களால் அபாரமாக வெற்றியீட்டியுள்ளது.

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு, ஆர். பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை முதலில் துடுப்பெடுததாட தீர்மானித்தது. இதன் பிரகாம் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 97 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 43 ஓட்டங்களையும் குசல் மெண்டீஸ் 38 ஓட்டங்களையும் தனஞ்சய டிசில்வா 30 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

300 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு முதல் ஓவரிலேயே சுரங்க லக்மால் அதிர்ச்சி அளித்தார். அதன்படி தென்னாபிரிக்க அணி எதுவித ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ளாது முதல் ஓவரின் நான்காவது பந்திலேய அம்லா போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து அணித் தலைவர் டீகொக்குடன் இணைந்து மர்க்ரம் இலங்கை அணிக்கு ஆட்டம் காட்ட ஆரம்பித்தபோது 5.4 ஆவது பந்தில் அகில தனஞ்சயவிடம் சிக்கினார். இதன்படி அவர் 13 பந்துகளை எதிர்கொண்டு 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹேண்ட்ரிக்ஸும் அகில தனஞ்சயவின் அடுத்த பந்தில் எதுவித ஓட்டங்களும் பெறாது போல்ட் முறையில் ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணிக்கு அகில தனஞ்சய அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

இவரையடுத்து வந்த கிளேசனும் தனஞ்சயவின் சுழலில் சிக்கி அதிக நேரம் தாக்குபிடிக்காது மூன்று ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி 39 ஓட்டங்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து நிலைகுலைந்து தடுமாறியது.

அதன்பின் களம் புகுந்த டூமினியுடன் ஜோடி சேர்ந்து டீகொக்கும் சேர்ந்தாட தென்னாபிரிக்க அணி 85 ஓட்டங்களை கடந்தது. இதன் பின் தனஞ்சய டிசில்வாவின் பந்து வீச்சினை எதிர்கொண்ட டூமினி 12 ஓட்டங்களுடன் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தென்னாபிரிக்காவுக்கா மிகவும் போராடி வந்த அணியின் தலைவர் டீகொக் அரைசதத்தினை பூர்த்தி செய்த நிலையில் அகில தனஞ்சய பந்தை மீண்டும் கையில் எடுக்க 57 பந்துகளுக்கு 54 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக தென்னாபிரிக்க அணி இலங்கையின் பந்து வீச்சுக்களை எதிர்கொள்ள முடியாது 24.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்று 178 ஓட்டங்களினால் படுதோல்வி கண்டது.

இலங்கை அணி சார்பாக தென்னாபிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த அகிலதனஞ்சய 29 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுக்களையும், லஹுரு குமார இரண்டு விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால், தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றிய அகில தனஞ்சய தெரிவு செய்யப்பட்டதுடன் தொடரின் ஆட்டநாயகனாக ஜே.பி.டூமினி தெரிவு செய்யப்பட்டார்.

இவ்விரு அணிகளுக்கிடையிலான ஒரு இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.