புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதனால் நள்ளிரவு முதல் அஞ்சல் புகையிரத சேவையனாது ஆரம்பமாகவுள்ளதுடன் நாளை காலை முதல் நாட்டின் அனைத்து வகையான புகையிரத சேவைகளும் வழமைக்கு திரும்பவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி புகையிரத தொழிற்சங்கங்கள் முன் அறிவித்தல் ஏதுவுமின்றி கடந்த புதன்கிழமை மாலை முதல் தொடர்ந்து ஐந்து நாட்க்களாக பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இதனையடுத்து புகையிரத தொழிற்சங்கத்தினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பொலன்னறுவையில் இடம்பெற்றபோது, ஜனாதிபதி புகையிரத தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைக்கு தீர்வை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்ததன் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை கைவிடுவதற்கு புகையிரத தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்தனர். 

இதன் காரணமாகவே இன்று நள்ளிரவு முதல் தபால் புகையிரத சேவை ஆரம்பிக்கப்படுவதுடன் நாளை காலை முதல் நாட்டின் அனைத்து வகையான புகையிரத சேவைகளும் வழமைக்கு திரும்பவுள்ளன.

மேலும் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவைகள் இன்று இரவு முதல் வழமைக்கு திரும்புவதாக யாழ்.புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.