(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தில் பக்கசார்பாகவும் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் நன்மையான விடயங்களை கூட புறக்கணித்து அரசாங்கத்தின் மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி வருவதனால் சபாநாயகர் பதவியை வகிப்பதற்கு கருஜயசூரியவுக்கு தகுதியில்லையென பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தலை பழைய முறையிலேயே நடத்தப்போவதாக தற்போது அறிவித்துள்ளனர். இதுவும் மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்காக அரசாங்கத்தால் கையாளப்பட்ட தந்திரோபாயமே ஆகும். மீண்டும் பழைய முறைய முறைக்கு செல்லவதென்றால் எல்லை நிர்ணயம் தொடர்பான சிக்கல்களும் ஏற்படும். அவற்றை சரி செய்ய இன்னும் காலம் எடுக்கும். எவ்வாறிருப்பினும் எந்த முறையில் தேர்தல் நடத்தப்படாலும் அதற்கு முகங்கொடுப்பதற்கு பொது எதிரணி தயாராகவே உள்ளது. 

கூட்டு எதிர்கட்சியால் கொழும்பில் முன்னெடுக்கபட்ட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சீன நிதி வழங்கியதாக சில அரசாங்க தரப்பினர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடாகும். எனவே அந்நாடு வேறு எந்த நாட்டினதும் உள்ளக விடயங்களில் தலையிடுவதில்லை. ஆனால் தற்போது பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையின் அனைத்து உள்ளக விடயங்களிலும் தலையிடுகின்றன. இதற்கு அரசாங்கம் என்ன பதிலளிக்கும்? என்றார்.