பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கவுள்ள இம்ரான் கான், அந்நாட்டு தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்புக் கோரிக் கடிதம் அளித்துள்ளார்.  

பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக  உருவெடுத்த இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி, சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க இருக்கிறது. 

முன்னதாக, தேர்தல் வாக்குப்பதிவின் போது, இஸ்லாமாபாத்  தொகுதியில் வாக்களித்த இம்ரான் கான், அனைவரது முன்னிலையிலும் தனது வாக்கைப்பதிவு செய்தார். இம்ரானின் இந்தச் செயல்  பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவர், வெளிப்படையாக வாக்களித்த புகைப்படங்கள் வெளியாகியது.

இதனையடுத்து, தேர்தல்  விதிமுறைகளை மீறி இம்ரான் கான் நடந்து கொண்டதால், அவருக்கு தேர்தல் ஆணயம் நோட்டீஸ் அனுப்பியது.  

இதனையடுத்து, தேர்தல் ஆணயத்தில் இம்ரான் கான் சார்பில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி விளக்கக் கடிதம் அளித்தார். 

அதில், `வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், கூட்ட நெரிசலில் வாக்குப் பதிவுசெய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த திரை கீழே  விழுந்துவிட்டது. இதனால், இம்ரான் தனது வாக்கை வெளிப்படையாகப்பதிவு செய்யும் சூழல் ஏற்பட்டது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

ஆனால், இதைத் தேர்தல் ஆணையம் ஏற்காமல் நிராகரித்தது. பின்னர் எழுத்து மூலமாக மன்னிப்புக் கடிதத்தை தேர்தல் ஆணயத்திடம் தாக்கல் செய்துள்ளார் இம்ரான் கான்.