அமெரிக்கா உலக நாடுகளிடையே நம்பிக்கையை இழந்துவிட்டது என ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் ட்ரம்ப் கடந்த திங்கட்கிழமை கையெழுத்திட்டார். 

மேலும் ‘இது நவம்பர் மாதம் அடுத்த கட்ட நிலையை அடையும். யாராவது ஈரானுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம். நான் உலகத்தின் அமைதிக்காகவே இதைக் கேட்கிறேன். வேறு எதுவும் இல்லை’ என்றார். 

இந்த நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிப் கூறும்போது, 

"அமெரிக்காவுடன் இனியும் பேச்சுவார்த்தை என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது. நாங்கள் அமெரிக்காவை எப்படி நம்ப முடியும். தன்னுடைய ஒழுங்கற்ற முடிவுகளால் அமெரிக்கா உலக நாடுகளிடையே நம்பிக்கையை இழந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது புதிய புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.