யாழில்.இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்கள் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவங்களே என தன்னிடம் பொலிஸார் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் இல்லத்தில் பொலிஸாருடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , 

யாழில்.இயங்கும் ஆவா மற்றும் தனு ரொக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவங்களே வாள் வெட்டு சம்பவங்களுக்கு காரணம் என பொலிஸார் எனக்கு தெரிவித்தனர். 

அத்துடன் குறித்த குழுவில் உள்ளவர்களின் ஒளிப்படங்கள் , அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களின் ஒளிப்படங்கள் , அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களின் ஒளிப்படங்கள் எனபவற்றை எனக்கு காட்டினார்கள். 

தற்போது குறித்த குழுக்களின் செயற்பாடுகளை தாம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் , பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து சிவில் பாதுகாப்பு குழுக்களை அமைப்பதற்கு இணக்கம் கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதேவேளை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் , பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் குறித்து வாராந்தம் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என பொலிஸாரிடம் கூறியுள்ளேன் என மேலும் தெரிவித்தார்.