குள்ள மனிதர்கள் என்பது இல்லாத விடயம். அதன் பின்னால் அரசியல் பின்னணிகள் இருகின்றன என தாம் நம்புவதாக பொலிஸார் தம்மிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

யாழில்.முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிகிழமை முதலமைச்சர், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் ரொஷன் பெனர்ண்டோ, யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித பெனர்ண்டோ உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து யாழில்.நடைபெறும் வன்முறை சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

குள்ள மனிதர்களை தாம் நேரில் கண்டோம் என எவரும் தம்மிடம் முறைப்பாடு செய்யவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதனால் குள்ள மனிதர்கள் தொடர்பான செய்திகள் அரசியல் பின்னணியால் உருவானது என பொலிஸார் சந்தேகிக்கின்றார்கள். 

அதேவேளை யாழில்.இடம்பெறும் மணல் கடத்தல்கள், போதை பொருள் கடத்தல்கள், வீதி விபத்துக்கள் ஆகியவற்றை கட்டுபடுத்துவது தொடர்பில்  கலந்துரையாடப்பட்டது என மேலும் தெரிவித்தார்.